கர்நாடக அரசியல் களத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தலைமை மாற்றம் தற்போது அதிரடியாக அரங்கேறியுள்ளது. அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராகக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவக்குமார் இன்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். பெங்களூருவில் உள்ள லோக் பவனின் கண்ணாடி மாளிகையில் (Glass House) நடைபெற்ற பிரமாண்ட விழாவில், கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், டி.கே.சிவக்குமாருக்குப் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். முன்னதாக முதல்வராக இருந்த சித்தராமையா தனது பதவியை முறைப்படி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் ஆட்சியைப் பிடித்தபோதே, இருவருக்குள்ளும் ஆட்சி அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் போடப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே டி.கே.சிவக்குமார் முதலமைச்சராக அரியணை ஏறியுள்ளார். சித்தராமையாவுக்குப் பிறகு கர்நாடகாவின் 25-வது முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள டி.கே.சிவக்குமாரின் இந்த பதவியேற்பு விழா, ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பையும், காங்கிரஸ் தொண்டர்களிடையே அசுர உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
