சமீபத்தில் நிறைவடைந்த ஐபிஎல் 2026 தொடரைத் தொடர்ந்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி தொடர்பாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் ‘டீப்ஃபேக்’ போலி வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட அந்தப் போலி வீடியோவில், பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, “உங்களுக்கும் விராட் கோலியைப் போல ‘கிங்’ ஆக ஆசை இருக்கிறதா?” என்று கேட்பது போலவும், அதற்கு வைபவ் சூர்யவன்சி, கோலியை “சுயநலவாதி” என்றும், “மெதுவாக விளையாடுபவர்” என்றும் அலட்சியமாகப் பதிலளிப்பது போலவும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருந்தன.

இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி, கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து ஹர்ஷா போக்லே தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, என்னையும், வைபவ் சூர்யவன்சியையும் இணைத்து சமூக வலைதளங்களில் ஒரு போலி வீடியோ உலா வருவதைக் கவனித்தேன். அதில் வைபவ் மிகவும் திமிராகவும், மரியாதையின்றியும் பேசுவது போல் காட்டப்பட்டுள்ளது. உண்மையில், நான் அவரிடம் அப்படி எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை; அவரும் அவ்வாறு பதிலளிக்கவில்லை.

நேர்காணல்களில் எப்போதும் மிகவும் மரியாதையுடன் நடந்துகொள்ளும் ஒரு சிறுவனுக்கு எதிராக, இப்படிப்பட்ட கொடூரமான மற்றும் தீங்கிழைக்கும் செயலில் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

உண்மையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் 2026 இறுதிப்போட்டிக்குத் பிறகு, விராட் கோலியும் வைபவ் சூர்யவன்சியும் மிகவும் நெகிழ்ச்சியாகப் பேசிக்கொண்ட வீடியோவை ஐபிஎல் நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டிருந்தது.

அந்தச் சந்திப்பின் போது, 15 வயதே ஆன இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி இருகரம்கூப்பி விராட் கோலிக்கு மரியாதை செலுத்தினார். அவரிடம் கோலி, “மிகவும் பிரமாதமாக விளையாடினாய் தம்பி!”என்று தட்டிக்கொடுத்துப் பாராட்டினார்.

https://x.com/knight_17_/status/2061782563564535922?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2061782563564535922%7Ctwgr%5E7c633a2ae522690e9f2f414f9a17bf6a0b22c176%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fsports.ndtv.com%2Fcricket%2Fharsha-bhogle-calls-out-fake-vaibhav-sooryavanshi-clip-calling-virat-kohli-slow-11583448

நடப்பு ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்தமாக 776 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் எடுத்தவர்களுக்கான ‘ஆரஞ்சு தொப்பியை’  வைபவ் சூர்யவன்சி வென்றார். அவர் மேடையில் விருதினைப் பெறச் சென்றபோது, விராட் கோலி தனது முன்னாள் சக வீரரான ஏபி டி வில்லியர்சிடம், “இந்தச் சிறுவன் தனித்துவமானவன்; அவனால் மிகச் சிறப்பாகப் பேட்டிங் செய்ய முடிகிறது என்று மனதாரப் புகழ்ந்தார்.

இரு வீரர்களுக்கும் இடையே இத்தகைய பரஸ்பர மரியாதையும், நற்புறவும் இருக்கும் சூழலில், சமூக வலைதளங்களில் விளம்பரத்திற்காக இத்தகைய போலிச் செய்திகள் பரப்பப்பட்டு வருவது விளையாட்டு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.