தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக உடனான தங்களின் 20 ஆண்டுகால பந்தத்தை முறித்துக் கொண்டு, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ள விவகாரம் தேசிய அளவில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் இன்று (ஜூன் 03) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழகப் பொறுப்பாளரும், கோவா மாநில காங்கிரஸ் தலைவருமான கிரிஷ் சோடங்கரிடம், தவெக – காங்கிரஸ் கூட்டணி மற்றும் திமுகவுடனான உறவு குறித்து செய்தியாளர்கள் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர்.

​அதற்குப் பதிலளித்த கிரிஷ் சோடங்கர், “தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள ‘இந்தியா’ (INDIA) கூட்டணி என்பது முற்றிலும் டெல்லி தலைமையால் கையாளப்படும் ஒரு பெரிய விவகாரம். தற்போதும் அந்த தேசியக் கூட்டணியில் திமுக ஒரு முக்கிய அங்கமாகவே நீடித்து வருகிறது. ஆனால், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த புதிய அரசியல் மாற்றம் மற்றும் தவெக உடனான கூட்டணியில் ஏற்பட்டுள்ள அடுத்தகட்ட மேம்பாடுகள் குறித்து தற்போதைக்கு எனக்கு முழுமையாகத் தெரியாது” என்று மிகவும் சாதுரியமாகப் பதிலளித்து மழுப்பியுள்ளார். தமிழகத்தில் தவெக ஆட்சியில் காங்கிரஸ் பங்குபெற உள்ள நிலையில், தேசிய அளவில் இன்னும் திமுகவுடன் கூட்டணி என காங்கிரஸ் தலைவர் பேசியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளது.