கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் கனரக லாரிகளை அனுமதிப்பது தொடர்பாக தமிழக முன்னாள் அமைச்சர்களான அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் மனோ தங்கராஜ் ஆகிய இருவருக்கு இடையே வார்த்தைப்போர் தீவிரமடைந்துள்ளது. விதிகளைப் பின்பற்றி கேரளாவுக்கு செல்லும் லாரிகளை அனுமதிக்க வேண்டும் என அனிதா ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததோடு இதனை எதிர்த்த மனோ தங்கராஜை மனக்குழப்பத்தில் இருக்கிறார் என்று விமர்சித்திருந்தார்.
இதற்கு செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலடி கொடுத்துள்ள முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் எனக்கு என்றைக்கும் மனக்குழப்பம் இருந்ததில்லை அதேசமயம் பல அழுத்தங்கள் இருக்கின்றன அது எங்கிருந்து வருகிறது என்பதும் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நன்றாகவே தெரியும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் குமரி மாவட்டத்தில் சாலைகள் மிகவும் குறுகலாகவும், போக்குவரத்து நெரிசல் அதிகமாகவும் உள்ளதாலேயே நான் அமைச்சராக இருந்தபோது கனரக வாகனங்களுக்குத் தடை விதித்தோம். நீதிமன்றம் அந்தத் தடையை நிறுத்தி வைத்த பின்னர் வாகனங்களைக் கட்டுப்படுத்தவே மாவட்ட எல்லையில் சோதனைச் சாவடிகளை அமைத்தோம்.
இது யாரையும் வஞ்சம் தீர்ப்பதற்காகச் செய்யப்பட்டது அல்ல எனவே தற்போதைய அரசும் மாவட்ட நிர்வாகமும் அந்தச் சோதனைச் சாவடிகளைக் கலைக்கவோ அல்லது கட்டுப்பாடுகளைத் தளர்த்தவோ கூடாது என வலியுறுத்தியுள்ளார். கனிம வள கடத்தலுக்குப் பின்னால் இருக்கும் வலுவான பின்னணியை எதிர்ப்பது சவாலானது என்றும், தேர்தலுக்கு முன்பு என்ன நடந்தது என்பதைப் பேசினால் தவறாகிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
