நடப்பு ஐபிஎல் 2026 டி20 கிரிக்கெட் தொடர் நிறைவடைவதற்கு முன்பாக, போட்டிகளின் பாதுகாப்பு மற்றும் நேர்மைத் தன்மையை உறுதி செய்யும் நோக்கில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் புதிய அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி, ஐபிஎல் போட்டிகளின் போது வீரர்கள் மற்றும் போட்டி நடுவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் யாரும் ‘ஸ்மார்ட் சன்கிளாஸ்’ (Smart Sunglasses) எனப்படும் அதிநவீன கண்ணாடிகளைப் பயன்படுத்த முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிசிசிஐ-யின் ஊழல் தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள இந்த புதிய அறிவுறுத்தலின்படி, வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகள் தங்கும் பகுதி  மற்றும் ஆடுகளப் பகுதிக்குள் நுழையும் போது, தங்களது மொபைல் போன்கள், ஸ்மார்ட் வாட்ச்களுடன் சேர்த்து இந்த ஸ்மார்ட் சன்கிளாஸ்களையும் பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த அதிநவீன கண்ணாடிகளில் உள்ள வை-பை, மொபைல் டேட்டா வசதிகள் மூலம் நேரடி ஒளிபரப்பு), வீடியோ காலிங் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பவும் பெறவும் முடியும் என்பதால், இது ஆட்ட நிர்ணயச் சதிகளுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை மீறி ஸ்மார்ட் சன்கிளாஸ்களை ஒப்படைக்கத் தவறும் வீரர்கள் அல்லது ஊழியர்கள் மீது ஐபிஎல் நடத்தை விதிகளின் கீழ் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் தண்டனை பாயும் என பிசிசிஐ எச்சரித்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேலாளர் ரோமி பிந்தர் டக்அவுட் பகுதியில் மொபைல் போன் பயன்படுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பாதுகாப்பு காரணங்கள் மற்றும் ‘ஹனி டிராப்’  அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, வீரர்கள் அனுமதியின்றி நள்ளிரவில் வெளியே செல்லவும், அவர்களது ஹோட்டல் அறைகளுக்குள் விருந்தினர்கள் நுழையவும் பிசிசிஐ தடை விதித்திருந்தது. அந்த வரிசையில், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்த ‘ஸ்மார்ட் சன்கிளாஸ்’ தடையும் ஐபிஎல் தொடரின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.