ஐபிஎல் (IPL) கிரிக்கெட் போட்டிகளில் வீரர்கள் மற்றும் நடுவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் யாரும் இனி ‘ஸ்மார்ட் கண்ணாடிகளை’ (Smart Glasses) பயன்படுத்தக் கூடாது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அதிரடியாகப் பலத்த தடை விதித்துள்ளது. நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள் மூலம் லைவ் ஸ்ட்ரீமிங் செய்வது, ரகசியமாக போன் கால்கள் பேசுவது மற்றும் மெசேஜ்கள் அனுப்புவது போன்ற பல வேலைகளைச் செய்ய முடியும் என்பதால் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மைதானத்திற்குள் இருந்துகொண்டே பிட்ச் நிலவரம் மற்றும் ரகசிய உத்திகளை வெளியே கசியவிட்டு, சூதாட்டம் (Betting) மற்றும் ஊழல் போன்ற சட்டவிரோத செயல்களுக்கு வழிவகுத்துவிடும் என்ற பாதுகாப்பு அச்சம் காரணமாகவே பிசிசிஐ இந்த கிடுக்கிப்பிடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. போட்டிகள் நடக்கும் பகுதிக்குள் (Match Zone) செல்லும் முன்பே இத்தகைய எலக்ட்ரானிக் சாதனங்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இந்த விதிமுறையை மீறி ஸ்மார்ட் கண்ணாடியுடன் பிடிபட்டால் மிகக் கடுமையான அபராதமும், ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்றும் பிசிசிஐ அனல் பறக்கும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
