தமிழக அரசின் பல்வேறு துறை சார்ந்த சேவைகளைப் பெறுவதற்கு ஏற்கனவே ஆன்லைன் மற்றும் இ-சேவை மையங்கள் இருந்தாலும், சான்றிதழ்கள் கிடைப்பதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்கவும் பொதுமக்கள் காத்திருப்பதைத் தடுக்கவும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் நேரடியாகச் சேவைகளைப் பெறும் வகையில், ‘நம்ம அரசு நம்ம கையில்’ என்ற புதிய வாட்ஸ்அப் வசதியைத் தமிழக அரசு தற்போது தொடங்கியுள்ளது. இதன் மூலம் வருவாய், பிறப்பு, இறப்பு, சாதி மற்றும் இருப்பிடச் சான்றிதழ்கள் போன்ற 20 துறைகளின் கீழ் வரும் 66 சேவைகளை மிக எளிதாகப் பெற முடியும்.
பொதுமக்கள் 7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘வணக்கம்’ அல்லது ‘ஹாய்’ (Hi) என்று மெசேஜ் அனுப்பி இந்தச் சேவையைப் பயன்படுத்தத் தொடங்கலாம். தமிழில் சேவைகளைப் பெற ‘T’ என்றும், ஆங்கிலத்தில் பெற ‘E’ என்றும் பதிவிட்டு, தேவையான துறையைத் தேர்ந்தெடுத்துச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த வாட்ஸ்அப் சேவை மூலம் சான்றிதழ்கள் மட்டுமின்றி மின் கட்டணம், சொத்து வரி, தண்ணீர் வரி, தொழில் வரி மற்றும் தொழில் உரிமம் போன்ற பிற கட்டணங்களையும் செல்போன் வழியாகவே செலுத்த முடியும். மேலும், பொதுமக்கள் ஏற்கனவே விண்ணப்பித்துள்ள தங்களின் விண்ணப்பங்களின் தற்போதைய நிலையையும் இதன் மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
இதனால் பொதுமக்கள் எவ்விதக் கட்டணமும் இன்றி, எந்த இடத்தில் இருந்தும், எப்போது வேண்டுமானாலும் அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் தங்களுக்குத் தேவையான சேவைகளைப் பெற முடியும். இந்தச் சேவை குறித்து ஏதேனும் கூடுதல் உதவிகள் தேவைப்பட்டால், பொதுமக்கள் 18004256000 என்ற இலவச உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
