நடப்பு 2026 ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தன. நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான லீக் ஆட்டத்தில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 17 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் பெரிய ரன்கள் எடுக்காவிட்டாலும், இப்போட்டியின் மூலம் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் மிக முக்கியமான ஒரு சாதனையை முறியடித்துப் புதிய சரித்திரம் படைத்துள்ளார்.
இப்போட்டியின் முதல் ஓவரிலேயே தீபக் சாஹர் வீசிய பந்தில் ஜெய்ஸ்வால் ஒரு பிரமாண்ட சிக்ஸரை பறக்கவிட்டார். இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் இன்னிங்ஸின் முதல் ஓவரில் அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 14 சிக்ஸர்களுடன் ஜெய்ஸ்வால் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இதற்கு முன்பு 13 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் இருந்த ரோகித் சர்மா தற்போது இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இவர்களுக்கு அடுத்தபடியாக வீரேந்தர் சேவாக், கிறிஸ் கெய்ல் மற்றும் விராட் கோலி ஆகியோர் தலா 12 சிக்ஸர்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
