தைவானில் உள்ள வார்டு தலைவர் தேர்தலில் போட்டியிடும் லீ ஹங்-யி என்ற உள்ளூர் அரசியல்வாதி, இந்தியத் தொழிலாளர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தலைப்பாகை அணிந்த இந்தியரின் உருவத்தின் மேல் ‘தடை’ குறியீடு போட்ட சர்ச்சை விளம்பரப் பலகையை வைத்துள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, “நான் பொதுவாக வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு எதிரானவன் அல்ல, இந்தியத் தொழிலாளர்களுக்கு மட்டும்தான் எதிரானவன்” என்று இனவெறியுடன் பேசியுள்ளது சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
இந்த விவகாரம் சர்வதேச அளவில் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, தைவானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் பொதுச் செயலாளரும் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஜோசப் வூ இதற்குப் பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு உள்ளூர் அரசியல்வாதி வெறும் கவன ஈர்ப்பிற்காக இப்படி செய்திருப்பதை எண்ணி வெட்கப்படுவதாகவும், இந்தியா-தைவான் இடையேயான கூட்டுறவை வலுப்படுத்தத் தொடர்ந்து பாடுபடுவேன் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
தொழிலாளர் பற்றாக்குறையைப் போக்க, தைவான் அரசு இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு 1 லட்சம் இந்தியத் தொழிலாளர்களை அழைத்து வரப்போவதாகச் சில உள்ளூர் அரசியல்வாதிகள் பரப்பிய தவறான வதந்திகளே இந்த பய உணர்வுக்குக் காரணம் என்று ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், கடுமையான விதிமுறைகளுக்குப் பிறகே இந்தியர்கள் அங்கு வேலைக்கு வர முடியும் என்பதே உண்மை.
இதுகுறித்து அங்கு வாழும் இந்திய ஆராய்ச்சி மாணவர் அற்பிதா கூறுகையில், தைவான் மக்கள் அன்றாட வாழ்க்கையில் நேரடியாக இனவெறியைக் காட்டுவதில்லை என்றாலும், சமூக ஊடகங்களில் நிலவும் இந்திய எதிர்ப்பு அலையைத் தனது அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்தி இளம் வாக்காளர்களைக் கவரவே, இந்த வேட்பாளர் இத்தகைய கீழ்த்தரமான உத்தியைக் கையாண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தற்போது தைவானில் 7,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
