மருத்துவத் துறையில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகவும், புரட்சிகரமான மாற்றமாகவும் பார்க்கப்படும் ஒரு புதிய அறிவியல் கண்டுபிடிப்பை லண்டனில் உள்ள ‘கிங்ஸ் காலேஜ் ஆஃப் லண்டன்’ (King’s College London) கல்வி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் நிகழ்த்தியுள்ளனர்.

மனித உடலில் ஏற்படும் எலும்பு முறிவுகள் மற்றும் சேதமடைந்த எலும்புகளை மிக எளிதாகவும், இயற்கையாகவும் குணப்படுத்துவதற்காக, ஆட்டு கம்பளி எனப்படும் செம்மறி ஆட்டின் ரோமத்திலிருந்து (Sheep Wool) ஒரு குறிப்பிட்ட பொருளை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

செம்மறி ஆட்டின் ரோமத்தில் இயற்கையாகவே காணப்படும் ‘கெரட்டின்’ (Keratin) என்ற புரதச்சத்தை (Protein) எடுத்து, அதன் மீது சில ரசாயன மற்றும் தொழில்நுட்ப செயல்முறைகளை மேற்கொண்டு, ஒரு மிக மெல்லிய திரையை (Membrane) விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இந்த புரதச்சத்து மனிதனின் தலைமுடி மற்றும் நகங்களிலும் இயற்கையாகவே இருக்கக்கூடிய ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

விஞ்ஞானிகள் இந்த கெரட்டின் திரையை முதலில் ஆய்வகத்தில் மனித எலும்பு செல்கள் மீது வைத்து சோதனை செய்தபோது, அவை எதிர்பார்த்ததை விட மிக அதிவேகமாக வளர்ந்து ஒன்றோடொன்று இணைந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, உயிருள்ள எலிகளின் மண்டை ஓட்டில் இயற்கையாகவே எப்போதும் ஆறாத சில துளைகளின் மீது இந்தத் திரையை வைத்துப் பரிசோதனை செய்தனர்.

சில வார தீவிர கண்காணிப்பிற்குப் பிறகு, அந்தத் துளைகள் இருந்த இடத்தில் எலிகளுக்கு இயற்கையாகவே புதிய எலும்புகள் முளைத்து வளர்ந்திருப்பதை விஞ்ஞானிகள் ஆச்சரியத்துடன் கண்டறிந்தனர். உலகிலேயே ஒரு விலங்கின் எலும்பை, ஆட்டு ரோமத்தின் புரதத்தை வைத்துக் குணப்படுத்துவது இதுவே முதல்முறையாகும்.

தற்போது மருத்துவ உலகிலும், பல் அறுவை சிகிச்சைகளிலும் எலும்புகளை ஒட்டவைக்க ‘கொலாஜன்’ (Collagen) என்ற பசை போன்ற பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், இது எளிதில் உடையக்கூடியது மற்றும் இதன் உற்பத்திச் செலவும் மிக அதிகம். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கெரட்டின் திரையானது, கொலாஜனை விட அதிக வலிமையுடனும், பார்ப்பதற்கு அசல் இயற்கையான எலும்பு போன்ற அமைப்பை உருவாக்குவதோடு, மிகவும் மலிவான விலையிலும் கிடைக்கக்கூடியது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதுவரை உலகம் முழுவதும் விவசாயக் கழிவாகக் கருதப்பட்டு வீணாகத் தூக்கி எறியப்பட்ட செம்மறி ஆட்டின் ரோமங்கள், இனி மருத்துவத் துறையில் தங்கம் போன்ற மதிப்பைத் பெறப்போவதாக விஞ்ஞானிகள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.