மெட்டா (Meta) நிறுவனம் தனது உலகளாவிய பணியாளர்களில் இருந்து 8,000 ஊழியர்களை ஏஐ (AI) தொழில்நுட்பம் மூலம் பணிகளைச் செய்ய அதிரடியாகப் பணிநீக்கம் செய்துள்ளது. ஊழியர்களிடையே பதற்றத்தைத் தவிர்க்க, அன்றைய தினம் அனைவரையும் வீட்டிலிருந்தே வேலை செய்யக் கூறிவிட்டு, அதிகாலை 4 மணிக்கு பணிநீக்க மின்னஞ்சலை அனுப்பியுள்ளது.

இந்நிலையில், மெட்டாவில் தப்பிய ஊழியர் ஒருவர், “ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே தூங்கி, அதிகாலை 3 மணி வரை உழைத்த என் திறமையான சக ஊழியரைத் தூக்கிவிட்டார்கள்” எனச் சமூக வலைதளத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

​இதற்கிடையே, மெட்டா ஊழியர்கள் நிறுவனத்தின் மீது ஒரு பயங்கரமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். தங்களது கணினிச் செயல்பாடுகள் மற்றும் மவுஸ் நகர்வுகளை ரகசியமாகக் கண்காணித்து, அதன் மூலமே தங்களை வேலைநீக்கம் செய்யும் புதிய ஏஐ மாடல்களுக்கு மெட்டா நிறுவனம் பயிற்சி அளித்து வந்ததாக ஊழியர்கள் மனம் நொந்து தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு 16 வார அடிப்படை சம்பளமும், 18 மாத மருத்துவக் காப்பீடும் வழங்கப்படும் என மெட்டா அறிவித்திருந்தாலும், “எங்கள் உழைப்பை வைத்தே எங்களை அழிக்கும் AI-ஐ உருவாக்கிவிட்டார்கள்” என ஊழியர்கள் கதறி வருகின்றனர்.