அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி ஒன்றில், தண்ணீர் கொட்டுவதற்குப் பதிலாக நெருப்பு கொட்டுவது போன்ற அரிய இயற்கை விந்தை நிகழ்ந்துள்ளது. சூரிய அஸ்தமனத்தின் போது நிகழ்ந்த இந்த அற்புதம், சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
உலகில் பல இடங்களில் இயற்கையின் விசித்திரமான காட்சிகள் நிறைந்திருந்தாலும், சில காட்சிகளை நாம் நேரில் பார்க்க முடியாவிட்டாலும், சமூக ஊடகங்கள் மூலமாக அவற்றைக் கண்டு வியக்க முடிகிறது. அந்த வகையில், எக்ஸ் (X) தளத்தில் தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சியரா நெவாடா மலைத்தொடரில், புகழ்பெற்ற ‘யோசெமிட்டி தேசிய பூங்கா’ அமைந்துள்ளது. இங்குள்ள நீர்வீழ்ச்சியில் வருடத்தில் சில நாட்கள் மட்டுமே இந்த அரிய காட்சி நிகழ்கிறது. சூரியன் மறையும் வேளையில், இந்த நீர்வீழ்ச்சியிலிருந்து தண்ணீர் கொட்டும் போது, அது அப்படியே நெருப்பு குழம்பு கொட்டுவதைப் போன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
பார்ப்பதற்கு அச்சு அசலாக நெருப்பைப் போலவே தோன்றும் இந்த சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற ஒளிக்கு அறிவியல் பூர்வமான காரணம் ஒன்று உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் சில நாட்கள் மட்டுமே இந்த நிகழ்வு அரங்கேறுகிறது. சூரிய அஸ்தமனத்தின் போது, சூரியனின் கதிர்கள் இந்த நீர்வீழ்ச்சியின் மீது ஒரு குறிப்பிட்ட கோணத்தில் விழுகின்றன. இதனால் அங்கிருந்து விழும் தண்ணீர், தங்கம் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் பளபளத்து, நெருப்பு எரிவதைப் போன்ற பிரமையை உருவாக்குகிறது. இதனைப் பார்ப்பவர்கள் இதனை ‘நெருப்பு ஆறு’ என்று அழைக்கின்றனர்.
For a few minutes each year, sunlight makes this Yosemite waterfall look like a river of fire.😍 pic.twitter.com/hbqXQ295hh
— UFO mania (@maniaUFO) May 16, 2026
இயற்கையின் இந்த பேரதிசய வீடியோ, எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. “ஒவ்வொரு ஆண்டும் சில நிமிடங்களுக்கு மட்டுமே, சூரிய ஒளியின் காரணமாக இந்த யோசெமிட்டி நீர்வீழ்ச்சி ஒரு ‘நெருப்பாறு’ போல காட்சியளிக்கிறது” என்று அந்த பதிவின் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது வரை 3 மில்லியனுக்கும் (30 லட்சம்) அதிகமானோர் இந்த வீடியோவைப் பார்த்து ரசித்துள்ளனர். மேலும், இந்த வீடியோவிற்கு கீழே கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள் பலரும் தங்களது வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் ஒரு பயனர், “இன்றைய காலத்தில் உண்மையானது எது, ஏஐ (AI) தொழில்நுட்பம் எது என்றே தெரியவில்லை; இது உண்மையானது தானா?” என்று கேட்டுள்ளார். அதற்கு மற்றொருவர், “இது மிகவும் கண்கொள்ளா காட்சி, இயற்கையின் அரிய கொடை” எனப் பதிவிட்டுள்ளார்.
