குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் ஷிலாஜ் பகுதியில், சொந்த மாமனாரையே மருமகன் கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் உள்ளாடைகளைத் திருடியதைப் பார்த்ததால் இந்த கொலை நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அகமதாபாத்தில் வசித்து வந்த மனிஷ்பாய் என்பவர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து போபால் போலீசார் விசாரணை நடத்தியபோது, மனிஷ்பாயின் மைத்துனர் மகன் பிரஜ் சோனி என்பவர் கடந்த 10 நாட்களாக அவர்களது வீட்டிலேயே தங்கியிருந்ததும், சம்பவத்தன்று அவர் தலைமறைவானதும் தெரியவந்தது.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பிரஜ் சோனி அதிகாலையில் மனிஷ்பாயின் காரை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றது உறுதியானது. மேலும் வீட்டிலிருந்து ரூ. 5 லட்சம் ரொக்கம் மாயமாகியிருந்தது. உதயப்பூரில் பதுங்கியிருந்த பிரஜ் சோனியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 2 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் திருடப்பட்ட பெண்களின் உள்ளாடைகள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீஸ் விசாரணையில் கொலையாளி பிரஜ் சோனி அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது:
பிரஜ் சோனிக்கு பெண்களின் ஆடைகளை, குறிப்பாக உள்ளாடைகளை அணியும் விசித்திரமான பழக்கம் இருந்துள்ளது. இது ஒரு வகையான மனநல பாதிப்பு என போலீசார் கருதுகின்றனர். சம்பவத்தன்று அதிகாலையில் மாமனார் மனிஷ்பாயின் வீட்டில் உள்ளாடைகளையும், பணத்தையும் பிரஜ் சோனி திருடிக்கொண்டிருந்தார். அப்போது மனிஷ்பாய் அவரை கையும் களவுமாகப் பிடித்துக் கண்டித்துள்ளார். தனது திருட்டும், விசித்திர பழக்கமும் வெளியே தெரிந்தால் அவமானம் ஏற்படும் என அஞ்சிய பிரஜ் சோனி, மனிஷ்பாயின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
ஏற்கனவே ஒருமுறை மனிஷ்பாயின் வீட்டில் 25 ஆயிரம் ரூபாயைத் திருடி பிரஜ் சோனி பிடிபட்டதும், அப்போது குடும்பத்தினர் அவரை கண்டித்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரஜ் சோனியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
