தமிழக அரசியலில் சமூக வலைதளப் போர்க்களம் இன்று உச்சக்கட்ட அனலைச் சந்தித்துள்ளது. முதலமைச்சர் விஜய் திமுகவை விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்துக்கு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மிகக் கடுமையான பதிலடியைத் தந்துள்ளார்.
“சட்டமன்றத்தில் பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிடும் முதலமைச்சர் அவர்களே… பெரும்பான்மை இல்லாத நிலையிலும் பதவி வெறியோடு நாங்கள் ஆளுநர் மாளிகைக்கு ‘டெய்லி அட்டெண்டன்ஸ்’ போடவில்லை; மக்கள் தீர்ப்பை மதித்துதான் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்” என உதயநிதி சீறியுள்ளார்.
மேலும், “நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்றால், அதே மக்களால் எங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குகளைக் காட்டித்தான் நீங்கள் இன்று முதலமைச்சராகவே ஆகியிருக்கிறீர்கள் என்பதை மறந்துவிட்டீர்களா?” என நேரடியாக விஜய்யை நோக்கி ‘சிஎம் சார்’ என விளித்து உதயநிதி கேள்வி எழுப்பியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2006-ம் ஆண்டு திமுக ஆட்சியை விமர்சித்த விஜய்க்குப் பதிலளித்த உதயநிதி, “அந்த ஆட்சி உங்களைப் போல எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்தில் விலைக்கு வாங்கியோ அல்லது ‘சோபா செட்’ அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அல்ல; அது கூட்டணிக் கட்சிகளின் வெளிப்படையான ஆதரவுடன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி” எனப் போட்டுத் தாக்கியுள்ளார்.
“திமுக 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம், ஆனால் திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்க்கட்சியாக எங்களுடைய முதல் வெற்றி” என உதயநிதி பதிவிட்டுள்ள இந்த ‘பஞ்ச்’ வரிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. முதலமைச்சர் விஜய்யின் பதிவும், அதற்கு உதயநிதி கொடுத்துள்ள இந்த ‘வெயிட்டான’ பதிலடியும் தவெக – திமுக இடையே ஒரு பெரிய அரசியல் யுத்தத்திற்குத் திரியைக் கிள்ளிப்போட்டுள்ளது.
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.…
— Udhay – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@Udhaystalin) May 13, 2026
“>
