சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞர் சத்தியமூர்த்தி, திருமண இணையதளம் மூலம் பெண் தேடியபோது ஒரு மோசடி வலையில் சிக்கியுள்ளார். இவரைத் தொடர்பு கொண்ட ஒரு இளம்பெண், தான் அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறி ஆசை வார்த்தை பேசியுள்ளார். பின்னர், அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்காக ஒரு ஆன்லைன் நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு அந்தப் பெண் வற்புறுத்தியுள்ளார்.

இதனை உண்மை என்று நம்பிய சத்தியமூர்த்தி, சிறுகச் சிறுக 52 தவணைகளாக மொத்தம் 45 லட்சம் ரூபாயை அந்தப் பெண் சொன்ன வங்கிக் கணக்குகளில் செலுத்தியுள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு அந்தப் பெண் திடீரென தனது தொடர்பைத் துண்டித்துக் கொண்டார். அவரைத் தொடர்பு கொள்ள முடியாததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சத்தியமூர்த்தி அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அவர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பெண் யார்? இதன் பின்னணியில் இருக்கும் கும்பல் எது? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண ஆசையில் இளைஞரிடம் லட்சக்கணக்கில் பணம் பறிக்கப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.