தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை அடைய இன்னும் 10 தொகுதிகள் குறைவாக உள்ளன.
திமுக கூட்டணி 73 இடங்களையும், அதிமுக கூட்டணி 53 இடங்களையும் பெற்றுள்ள சூழலில், தவெக யாருடைய ஆதரவுடன் ஆட்சி அமைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
இதற்கிடையில், காரல் மார்க்ஸ் பிறந்தநாளில் மரியாதை செலுத்திய புரட்சி அதிமுகவின் புகழேந்தி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தேய்ந்துவிட்டதாகவும், அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் தங்கள் எதிர்காலத்தைக் கருதி ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மக்களின் தீர்ப்பு தெளிவாக உள்ள நிலையில், ஆட்சி அமைய உறுதுணையாக இருப்பதில் தவறில்லை என்று குறிப்பிட்ட புகழேந்தி, அதிமுக எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமியை நம்பி பாதாளத்திற்குச் செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் மக்களாட்சி நிலைபெறவும், ஒரு நிலையான ஆட்சி அமையவும் வெற்றி பெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் விஜய்க்கு ஆதரவு அளிப்பது குறித்துச் சிந்திக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
பெரும்பான்மைக்கு இன்னும் சில இடங்களே தேவைப்படும் நிலையில், புகழேந்தியின் இந்த கருத்து அதிமுக மற்றும் தவெக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
