தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக தொண்டர் ஒருவர், பொது இடத்தில் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் நல்லூர் பகுதியைச் சேர்ந்த 60 வயதான அபி என்ற ரியல் எஸ்டேட் புரோக்கர், திமுகவின் தீவிர விசுவாசி ஆவார். தனது அரசியல் தலைவரின் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாத அவர், மிகுந்த மனவேதனைக்கு ஆளாகியுள்ளார்.
மனமுடைந்த நிலையில் விஜயாபுரம் பகுதியில் உள்ள ஒரு தேநீர் கடைக்குச் சென்ற அபி, திடீரென அங்கிருந்த கண்ணாடி டம்ளரை உடைத்து, அதன் கூர்மையான துண்டால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். ரத்தம் பீறிட்டுத் தெறிப்பதைக் கண்டு அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு அவரை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து நல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அரசியல் தோல்வியால் தொண்டர் ஒருவர் இத்தகைய விபரீத முடிவெடுத்தது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
