காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கில், சவர்க்கரின் பேரன் சத்யகி சவர்க்கர் புனே சிறப்பு நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணையின் போது பல முக்கிய உண்மைகளை ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு லண்டனில் ராகுல் காந்தி ஆற்றிய உரையில், சவர்க்கர் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி சத்யகி சவர்க்கர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்தி தரப்பு வழக்கறிஞர் மிலிந்த் பவார் நடத்திய குறுக்கு விசாரணையில் சத்யகி பதிலளித்தார். அப்போது, அந்தமான் செல்லுலார் சிறையில் இருந்தபோது, சவர்க்கர் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ஐந்து முறை மன்னிப்புக் கடிதங்களைச் சமர்ப்பித்ததை சத்யகி ஒப்புக்கொண்டார். இருப்பினும், அந்த காலக்கட்டத்தில் பல அரசியல் கைதிகள் இது போன்ற கடிதங்களை எழுதுவது வழக்கம் என்று அவர் விளக்கமளித்தார்.
சவர்க்கரின் கொள்கைகள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “சவர்க்கர் பசுவை தெய்வமாக வழிபடவில்லை. அதை ஒரு ‘பயனுள்ள விலங்காக’ மட்டுமே கருதினார். பசுவை தெய்வமாகப் பார்க்கும் கருத்தாக்கத்துடன் அவர் உடன்படவில்லை என்று சத்யகி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், இரண்டாம் உலகப் போரின்போது இந்தியர்களை பிரிட்டிஷ் ராணுவத்தில் சேருமாறு சவர்க்கர் அழைப்பு விடுத்ததையும் அவர் உறுதிப்படுத்தினார். இந்தியா சுதந்திரம் அடையும் போது பயிற்சி பெற்ற ஒரு ராணுவம் நமக்குத் தேவை என்ற தொலைநோக்கு பார்வையில் அவர் இவ்வாறு செய்தார் என்றும் சத்யகி சவர்க்கர் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார். மேலும் நீதிமன்றத்தில் சவர்க்கரின் பேரனே அளித்த இந்த வாக்குமூலங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
