ஐபிஎல் களத்தில் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக், தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கி கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது, அவுட்டாகி வெளியேறிய ரியான் பராக், வீரர்கள் ஓய்வறைக்கு (Dressing Room) சென்றார். அங்கு அவர் ‘இ-சிகரெட்’ பயன்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் பரவியது. இந்தியாவில் ‘இ-சிகரெட்’ தடை செய்யப்பட்ட ஒன்று என்பதால், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
விளையாட்டு வீரர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஒரு கேப்டன், பொது இடத்தில் இத்தகைய செயலில் ஈடுபட்டது விதிமீறலாகக் கருதப்பட்டது. இது குறித்து உடனடியாக விசாரணையைத் தொடங்கிய பிசிசிஐ, தற்போது ரியான் பராக்கிற்கு அவரது போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இது முதல் முறையல்ல. சில நாட்களுக்கு முன்புதான், அந்த அணியின் மேலாளர் ரூமி பிந்தர் விதிகளுக்குப் புறம்பாக ‘டக் அவுட்டில்’ அமர்ந்து செல்போன் பயன்படுத்தியது நேரலையில் சிக்கியது. அவருக்கு ஏற்கனவே அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், இப்போது கேப்டனே சர்ச்சையில் சிக்கியுள்ளது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
