ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடி பேட்டிங்கால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் இவரை “இந்திய கிரிக்கெட்டின் வருங்காலம்” எனப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
கடந்த 2025 மெகா ஏலத்தில், அனுபவம் இல்லாத ஒரு சிறுவனை 1.1 கோடி ரூபாய் கொடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியபோது, பலரும் அந்த முடிவை விமர்சித்தனர். ஆனால், அறிமுக சீசனிலேயே சதம் அடித்து அசத்திய சூர்யவன்ஷி, இந்த ஆண்டு (2026) தனது ஆட்டத்தை வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.
நடப்புத் தொடரில் இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 52, 31, 39, 78, 0, 46, 8, 103, 43 என ரன்களைக் குவித்து வரும் சூர்யவன்ஷி, மொத்தம் 400 ரன்களுடன் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவரது அதிரடியும், நிதானமும் கலந்த ஆட்டம் சீனியர் வீரர்களையே வியக்க வைத்துள்ளது.
இது குறித்துப் பேசிய இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பிராட், “ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்கவுட்டிங் சிஸ்டத்தை (வீரர்களைக் கண்டறியும் முறை) பாராட்டியே ஆக வேண்டும். சூர்யவன்ஷி போன்ற ஒரு வைரத்தை அவர்கள் சரியாக அடையாளம் கண்டுள்ளனர். தற்போது அவர் மீண்டும் ஏலத்திற்கு வந்தால், நிச்சயம் அவரது விலை பல மடங்கு உயரும் என்பதில் சந்தேகமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
