அரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள சைன்சா கிராமத்தில், 100 ரூபாய் பணத்திற்காக ஏற்பட்ட சிறு மோதல் ஒரு சிறுவனின் உயிரையே பறித்துள்ள துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. 11 வயதே ஆன அந்த சிறுவன், வீட்டில் யாருக்கும் தெரியாமல் நூறு ரூபாயை எடுத்துள்ளான்.

இதனை அறிந்த அவனது தாய், சிறுவனை கடுமையாகக் கண்டித்ததோடு, இது குறித்து அவனது தந்தையிடம் கூறப்போவதாகவும் மிரட்டியுள்ளார். தந்தையின் கண்டிப்பிற்கு பயந்த சிறுவன், யாரும் எதிர்பாராத விதமாக வீட்டின் மாடியில் உள்ள அறைக்குச் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.

மேலும் சிறிது நேரம் கழித்து மாடிக்குச் சென்ற தாய், மகன் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிறுவனை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை அந்த சிறுவன் தூக்கில் தொங்கியதாகக் கூறப்படுகிறது. நூறு ரூபாய்க்காக ஒரு பிஞ்சு உயிர் பறிபோன இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.