தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், கேன் குடிநீருக்கான தேவை பெருமளவு உயர்ந்துள்ளது. இதனைப் பயன்படுத்தி சில நிறுவனங்கள் தரமற்ற முறையில் குடிநீர் விற்பனை செய்வதைத் தடுக்க சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
விற்பனை செய்யப்படும் குடிநீர் கேன்களில் பின்வரும் விவரங்கள் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி குடிநீர் தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் தெளிவாக இருக்க வேண்டும். நீர் சுத்திகரிக்கப்பட்ட தேதி மற்றும் அது பயன்படுத்த உகந்த இறுதி தேதி (Expiry Date) குறிப்பிட்டிருக்க வேண்டும்.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) உரிம எண் மற்றும் இதர அங்கீகார விவரங்கள் கட்டாயம் இடம் பெற வேண்டும்.
இந்த விதிமுறைகளை மீறி தரம் குறைந்த அல்லது போதிய விவரங்கள் இல்லாத குடிநீர் கேன்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. மேலும் மக்கள் குடிநீர் வாங்கும் போது அதன் தரத்தை உறுதி செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
