பொதுவாக மக்கள் சிறைக்குச் செல்வதைத் தவிர்க்கவே விரும்புவார்கள், ஆனால் தென் கொரியாவில் ஒரு விசித்திரமான கலாச்சாரம் பரவி வருகிறது. அங்குள்ள ‘பிரிசன் இன்சைடு மீ’என்ற இடத்திற்கு மக்கள் தாமாகவே முன்வந்து, பணம் செலுத்தி கைதிகளாக மாறுகின்றனர். இங்கு 28 நாட்கள் வரை தங்குவதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

மேலும் வெளியே இருந்து பார்ப்பதற்கு இது ஒரு சாதாரண சிறைச்சாலை போலவே காட்சியளிக்கிறது; சிறிய அறைகள், சீருடைகள் மற்றும் கடுமையான விதிகள் என அனைத்தும் ஒரு நிஜ கைதியின் வாழ்க்கையையே பிரதிபலிக்கின்றன.

இதன் பின்னணியில் உள்ள காரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தென் கொரியாவின் அதீத வேலைப்பளு, கடுமையான போட்டி மற்றும் அன்றாட வாழ்க்கையின் மன அழுத்தம் ஆகியவற்றிலிருந்து தப்பிக்கவே மக்கள் இந்த வழியைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

இதனால் மொபைல் போன்கள், கடிகாரங்கள் மற்றும் பிற மனிதர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட இந்த சிறை அறையில், தங்களுக்குத் தாங்களே அமைதியைத் தேடிக்கொள்கின்றனர். “உண்மையான சிறை என்பது நாம் வாழும் பரபரப்பான வெளி உலகம் தான், இந்த நான்கு சுவர்களுக்குள் தான் எங்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கிறது” என்று இங்கு வருபவர்கள் கூறுவது மனதை உலுக்கும் உண்மையாக இருக்கிறது.