மதுரை மாவட்டம் சேகம்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், அரசுப் பேருந்தில் வெறும் அரை கிலோ மல்லிகைப் பூவை எடுத்துச் சென்றதற்காக அவரிடம் ரூ.13 லக்கேஜ் கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக அரசுப் பேருந்துகளில் 10 கிலோவுக்கு அதிகமான சுமைக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ள நிலையில், குறைந்த அளவு பூவிற்கே கட்டணம் வசூலிக்கப்பட்டது விவசாயிகளிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
இது குறித்துப் பாதிக்கப்பட்ட விவசாயி அளித்த புகாரைத் தொடர்ந்து, “உரிய ஆதாரங்களுடன் முறையிட்டால் சம்பந்தப்பட்ட நடத்துநர் மீது கடுமையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என மதுரை மாவட்ட போக்குவரத்துத் துறை மேலாளர் உறுதி அளித்துள்ளார். ஏழை விவசாயி என்றும் பாராமல் நடந்த இந்தச் செயல் தற்போது சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது.
