ஐபிஎல் 2026 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது. இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 5-ல் தோல்வியடைந்து பிளே-ஆஃப் வாய்ப்பை சிக்கலாக்கியுள்ளது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசிப் போட்டியில் 103 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது மும்பை.

இந்த ஆட்டத்தில் மும்பை வீரர் திலக் வர்மா மற்றும் சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர் ஜேமி ஓவர்டன் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. ஆட்டத்தின் போது இரண்டு ரன்கள் எடுக்க முயன்று முடியாமல் போனபோது, ஓவர்டன் திலக் வர்மாவை நோக்கி, “ஏன் இரண்டு ரன்களுக்கு ஓடவில்லை?” எனக் கேட்டு சீண்டியுள்ளார்.

 

அதற்குத் திலக் வர்மா, “அங்கே பீல்டர் நிற்பது உனக்குத் தெரியவில்லையா?” எனப் பதிலடி கொடுக்க, வாக்குவாதம் முற்றியது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த திலக் வர்மா, “இங்கிருந்து கிளம்பு (Get out from here)” என ஓவர்டனை எச்சரிக்க, நடுவர் குறுக்கிட்டு இருவரையும் சமாதானம் செய்ய வேண்டியிருந்தது.

இந்தப் போட்டியில் சிஎஸ்கே கேப்டன் சஞ்சு சாம்சன் 54 பந்துகளில் 101 ரன்கள் விளாச, 207 ரன்கள் எடுத்த சிஎஸ்கே முன்னிலையில் மும்பை அணி வெறும் 104 ரன்களுக்குச் சுருண்டது குறிப்பிடத்தக்கது.