சுமார் 540 ஆண்டுகளுக்கு முன்பு, 1477-ஆம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த மார்ஜெரி ப்ரூஸ் என்ற பெண், தனது காதலர் ஜான் பாஸ்டனுக்கு எழுதிய உருக்கமான காதல் கடிதத்தை செயற்கை நுண்ணறிவு தற்போது துல்லியமாகப் புரிந்துகொண்டுள்ளது.

உலகின் மிகப்பழமையான காதல் கடிதமாகக் கருதப்படும் இதில், வரதட்சணைப் பிரச்சினையால் தங்களது திருமணம் நின்றுவிடுமோ என்ற மார்ஜெரியின் பயமும் வேதனையும் வெளிப்பட்டுள்ளது.

மார்ஜெரியின் தந்தை தர முன்வந்த வரதட்சணைத் தொகை ஜானின் குடும்பத்திற்குப் போதுமானதாக இல்லாததால், இருவருக்கும் இடையிலான உறவு முறியும் நிலையில் இருந்தபோது இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

மங்கிப்போன மை மற்றும் பழைய ஆங்கிலக் கையெழுத்தில் இருந்த இந்தக் கடிதத்தை மனிதர்களால் வாசிப்பது கடினமாக இருந்ததால், நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.

அதில், “நீங்கள் என்னை உண்மையாக நேசித்தால், பணத்திற்காக மட்டும் என்னை விட்டுப் பிரிந்து போகாதீர்கள்; சொத்தில் பாதி கிடைத்தாலும் உங்கள் மனைவியாக வாழ நான் தயார்” என்று மார்ஜெரி உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

பல நூற்றாண்டுகள் கடந்தும் ஒரு பெண்ணின் உண்மையான காதலையும், அக்கால சமூகச் சூழலையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்த வரலாற்று ஆவணத்தை மீட்டெடுத்துள்ளது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.