மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில், கடனாகக் கொடுத்த பணத்திற்கு வட்டி கட்ட முடியாத பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்த கந்துவட்டி கும்பலைச் சேர்ந்த ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அந்த நபரின் செல்போனில் நூற்றுக்கணக்கான பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பதாகக் கூறப்படும் தகவல் மாநிலத்தையே அதிரவைத்துள்ளது.
அதாவது கோலாப்பூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமித் சாவந்த் என்பவரிடம் 10 சதவீத வட்டிக்கு 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். சில மாதங்கள் வட்டி செலுத்தி வந்த நிலையில், அந்தப் பெண்ணின் பொருளாதாரச் சூழல் மோசமானதால் வட்டி கட்ட முடியவில்லை.
இதனைப் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அமித் சாவந்த், அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்று அவரைப் பலவந்தமாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அத்துடன் அந்த அருவருப்பான செயலைத் தனது செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். பின்னர் அந்த வீடியோவைக் காட்டி மிரட்டி, அந்தப் பெண்ணை மீண்டும் மீண்டும் சீரழித்ததாகக் கூறப்படுகிறது.
அமித் சாவந்தின் கொடூரம் இத்துடன் நிற்காமல், அந்த வீடியோவைத் தனது நண்பர்களுக்கும் காட்டிக் கேலி செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் நியாயம் கேட்டபோது, அமித் சாவந்த் அந்தப் பெண்ணையும் அவரது உறவினர்களையும் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
பொறுக்க முடியாத வேதனையடைந்த அந்தப் பெண், காந்திநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில் அமித் சாவந்த் ஒரு கார் டிரைவர் என்பதும், மறைமுகமாகக் கந்துவட்டி தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தில், அமித் சாவந்த் என்னைப்போலவே வட்டி கட்ட முடியாத பல ஏழைப் பெண்களைச் சீரழித்துள்ளார். அவரது செல்போனில் இது போன்ற 200 முதல் 300 ஆபாச வீடியோக்கள் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
போலீஸார் அமித் சாவந்தைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், இந்தச் சதியில் அவருக்கு உதவிய நண்பர் ரோஹித் கதம் மற்றும் அமித்தின் மனைவி மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பாதிக்கப்பட்ட பெண்கள் பயப்படாமல் முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என அந்தப் பெண் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கும்பலுக்குத் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. மேலும் இந்த வழக்கில் மேலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், விசாரணையின் வீச்சு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
