இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா, மைதானத்தில் ஆக்ரோஷமான வீரராக அறியப்பட்டாலும், நிஜ வாழ்க்கையில் அவர் ஒரு தங்கமான மனசுக்காரர் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது வளர்ச்சிக்குக் காரணமான பயிற்சியாளர் தாரக் சின்ஹாவிற்கு அவர் வீட்டைப் பரிசளித்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது.

சோனட் கிளப்பில் நெஹ்ரா பயிற்சி பெற்று வந்த காலத்தில், அவர் பயிற்சிக்குத் தாமதமாக வரும்போதெல்லாம் அவரது பயிற்சியாளர் தாரக் சின்ஹா அவரைக் கடுமையாகக் கண்டிப்பது வழக்கம். ஒருநாள், பயிற்சியாளர் தாரக் சின்ஹா தாமதமாக மைதானத்திற்கு வந்துள்ளார். இதைக் கவனித்த நெஹ்ரா, விளையாட்டுத்தனமாக அவரிடம் தாமதத்திற்கான காரணத்தைக் கேட்டுள்ளார். அதற்கு தாரக் சின்ஹா, தான் வாடகை வீட்டில் வசிப்பதாகவும், வீட்டை காலி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டதால் இந்தத் தாமதம் என்றும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

 

தன் குரு வாடகை வீட்டில் வசிப்பதைக் கேட்டு வருத்தமடைந்த நெஹ்ரா, மறுநாளே தாரக் சின்ஹாவிற்கு ஒரு பெரிய இன்ப அதிர்ச்சி அளித்தார். அவரிடம் ஒரு சாவியை ஒப்படைத்த நெஹ்ரா, “இதுதான் உங்கள் புதிய வீடு. எனக்கு வித்தை கற்றுக்கொடுத்த என் குரு வாடகை வீட்டில் வசிக்கும்போது, நான் மட்டும் எப்படி பங்களாவில் வசதியாக இருக்க முடியும்?” என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.

மைதானத்தில் சாம்பியனாகத் திகழ்ந்த நெஹ்ரா, தன்னைச் செதுக்கிய மனிதர்களை ஒருபோதும் மறந்ததில்லை என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி. கௌரவமும் நன்றியுணர்வும் மற்ற எல்லாவற்றையும் விட மேலானது என்பதை அவர் தனது செயல் மூலம் நிரூபித்துள்ளார். குருவிற்கும் சீடனுக்கும் இடையிலான இந்த உன்னதமான பிணைப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.