மத்திய கிழக்கு நாடான ஏமனில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் உள்நாட்டுப் போர், அந்நாட்டு குழந்தைகளின் வாழ்க்கையைச் சிதைத்து வருகிறது. அங்குள்ள பள்ளிக் குழந்தைகளின் கல்வி நிலை குறித்து வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவலின்படி, சுமார் 45 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
அதாவது, பள்ளிக்குச் செல்லும் வயதில் உள்ள குழந்தைகளில் 39 சதவீதம் பேர் இன்று படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு, குடும்ப வறுமை காரணமாகக் கூலி வேலைகளுக்குச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
போர் காரணமாக ஆயிரக்கணக்கான பள்ளிகள் இடிக்கப்பட்டும், ஆசிரியர்களுக்குப் பல ஆண்டுகளாகச் சம்பளம் வழங்கப்படாததாலும் கல்விச் சூழல் முழுமையாக முடங்கியுள்ளது.
தங்களின் எதிர்காலத்தைப் பற்றிய கவலை ஏதுமின்றி, ஒருவேளை உணவுக்காகச் சிறு வயதிலேயே கடின உழைப்பில் ஈடுபடும் இந்தக் குழந்தைகளின் நிலை சர்வதேச சமூகத்தை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு தலைமுறையே படிப்பறிவில்லாத நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள குழந்தைகளின் கல்வி உரிமையை மீட்க உடனடி நடவடிக்கைகள் தேவை என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
