மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள ஆதர்ஷ் நகர் சாலை தற்போது வாகன ஓட்டிகளுக்கு ஒரு ‘மரணப் பாதையாக’ மாறியுள்ளது. ஒரு லாரியில் இருந்து அதிகப்படியான கழிவுகள் சாலை முழுவதும் கொட்டிச் சிதறியதால், அந்தப் பகுதி முழுக்கவே வழுக்கத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக சாண்ட்விஸா முதல் பிளாக்ஸ் உணவகம் வரை சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறியுள்ளதால், அந்த வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து படுகாயமடைந்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதற வைத்துள்ளது.

 

ஏற்கனவே காட்கோபர் கிழக்கு பகுதியில் எண்ணெய் டேங்கர் கசிவால் விபத்துகள் நடந்த நிலையில், இப்போது அந்தேரியிலும் இதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது அதிகாரிகளின் மெத்தனப் போக்கைக் காட்டுகிறது. லோகண்ட்வாலா ஓஷிவாரா குடிமக்கள் சங்கம் இது குறித்து மும்பை காவல்துறை மற்றும் மாநகராட்சிக்கு அவசரப் புகார் அளித்துள்ளது.

“பெரிய விபத்துகள் நடக்கும் வரை அதிகாரிகள் காத்திருக்கப் போகிறார்களா?” என அந்தப் பகுதி மக்கள் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளனர். சாலை முழுவதும் டயர் தடங்கள் பதிந்து, சேறு படிந்திருக்கும் நிலையில், உடனடியாகச் சாலையைச் சுத்தப்படுத்தாவிட்டால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.