“நான் பேசியதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், திட்டமிட்டுத் தவறான தகவல்களைப் பரப்புகிறீர்கள்” என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பத்திரிகையாளர்கள் மீது மதுரையில் கடும் கோபத்தை வெளிப்படுத்தினார்.
சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரேமலதா, பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக விமர்சித்ததாகச் செய்திகள் வெளியான நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகப் பேசிய அவர், “அண்ணன் ஸ்டாலின் அவர்கள் இரண்டாவது முறை முதலமைச்சராக வருவது உறுதி; ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமைப்பது உறுதி.
அப்படி இருக்கும்போது பெண்களுக்குரிய பாதுகாப்பை அவர் நிச்சயம் உறுதிப்படுத்துவார் என்றுதான் சொன்னேன். பெண்கள் சார்பாக அவரிடம் உரிமையோடு கோரிக்கைகளை வைக்கலாம் என்று நான் சொன்னதை, ஏதோ ஆட்சியாளர்களைத் தப்பாகச் சொன்னது போலத் திரித்துப் போடுவதை இதோட நிறுத்திக்கொள்ளுங்கள்” என ஆவேசமாகத் தெரிவித்தார்.
ஆயிரம் கைகள் கொண்டு மறைத்தாலும் ஆதவனை மறைக்க முடியாது என்பது போல, இந்த வலுவான கூட்டணியைச் சிறுமைப்படுத்த யாராலும் முடியாது என அவர் சூளுரைத்தார். “ஒட்டுமொத்தப் பெண்களின் பாதுகாவலர் அண்ணன் ஸ்டாலின் தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
எங்களின் இந்தக் கூட்டணி 234 தொகுதிகளிலும் வென்று மீண்டும் அண்ணன் ஸ்டாலினை அரியணையில் அமர்த்தும்” எனத் திட்டவட்டமாகக் கூறினார்.
பொய் செய்திகளைப் பரப்பி கூட்டணிக்குள் கலங்கத்தை உண்டாக்கப் பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் எண்ணம் ஈடேறாது எனத் தனது பாணியில் எச்சரிக்கை விடுத்த பிரேமலதா, திமுக ஆட்சியை மீண்டும் கொண்டு வர பெண்கள் அனைவரும் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.
