பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பெஷாவர் ஜால்மி அணிக்காக விளையாடி வரும் பாபர் அசாம், குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 51 பந்துகளில் 71 ரன்கள் குவித்து தனது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 155 ரன்கள் என்ற இலக்கை எட்டிப்பிடிக்க பாபர் அசாம் தூணாக நின்று விளையாடிய போதிலும், கராச்சி மைதானத்தில் அவருக்குப் பெரும் அவமானம் காத்திருந்தது.

போட்டியின் போது கிடைத்த ‘ஃப்ரீ-ஹிட்’ வாய்ப்பை பாபர் அசாம் சரியாகப் பயன்படுத்தத் தவறியதை அங்கிருந்த ரசிகர்கள் கிண்டல் செய்யத் தொடங்கினர். பாபர் அசாம் ஃப்ரீ-ஹிட் பந்தை அடிக்க மாட்டார் என்பதை முன்னரே கணித்த ரசிகர்கள், அவர் பந்தை தவறவிட்டதும் ஆக்ரோஷமாகக் கத்தி அவரை உருவக்கேலி செய்தனர்.

 

மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அவரைத் தொடர்ந்து கிண்டல் செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இதற்கிடையே போட்டிக்குப் பின் பேசிய பாபர் அசாம், “எனது பேட்டிங் குறித்து நான் திருப்தியாக உணர்கிறேன், மைதானத்தில் அதிக நேரம் செலவிடுவது எனது நம்பிக்கையை அதிகரிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

ஜால்மி அணி தற்போது புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும், பாபர் அசாமுக்கு எதிராக மைதானத்தில் நிகழும் இந்தச் சம்பவங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.