மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்திலுள்ள கோந்திகேடா கிராமத்தில் நடந்த ஒரு கொலைச் சம்பவம், தற்போது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தேவ்கிருஷ்ண புரோஹித் (28) என்ற இளைஞர் கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி நள்ளிரவு அவரது வீட்டிலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து அவரது மனைவி பிரியங்கா (25), கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்து தன்னை கட்டிப்போட்டுவிட்டு, கணவனைக் கொன்று நகைகளைத் திருடிச் சென்றதாகக் கூறி கேமரா முன்னால் கண்ணீர் மல்க பேட்டியளித்தார். அவரது ‘ஆஸ்கர்’ லெவல் நடிப்பைப் பார்த்த ஊர் மக்கள் அனைவரும் பரிதாபப்பட்டனர்.

ஆனால், போலீஸார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அந்தப் பெண்ணின் உண்மை முகம் அம்பலமானது. பிரியங்காவுக்குக் ஒரு நபருடன் நீண்ட நாட்களாகத் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. தனது காதலனுடன் வாழ்வதற்கு கணவன் தடையாக இருப்பதால், அவரைத் தீர்த்துக்கட்ட ஒரு லட்ச ரூபாய்க்கு ஒரு வாடகைக்கொலையாளியை (Surendra) ஏற்பாடு செய்துள்ளார்.

இதற்காக 50,000 ரூபாயை முன்பணமாகவும் கொடுத்துள்ளார். கொலை நடந்த பிறகு, அது கொள்ளை நாடகம் என நம்பவைக்க நகைகளை வீட்டின் உள்ளேயே ஒளித்து வைத்துப் பொய் சொல்லியுள்ளார்.

விசாரணையில், பிரியங்கா தனது கணவனிடம் அடிக்கடி, “நீ கருப்பாக இருக்கிறாய், நீ எனக்குத் தகுதியானவன் இல்லை” என்று கூறி அவரை அவமானப்படுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.

வெறும் 36 மணிநேரத்திற்குள் இந்த மர்ம முடிச்சை அவிழ்த்த போலீஸார், பிரியங்கா மற்றும் அவரது காதலனைக் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள வாடகைக்கொலையாளியைத் தேடி வருகின்றனர்.