அலுவலகத்தில் பெண் ஊழியரின் மார்பகங்களைப் பார்ப்பது ஒழுக்கக்கேடான செயலாக இருக்கலாம், ஆனால் அது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354C-ன் கீழ் வரும் ‘வாயரிசம்’ (Voyeurism) எனும் குற்றமாகாது என மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றும் மூத்த அதிகாரி ஒருவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி அமித் போர்க்கர், “தவறான நோக்கத்தில் பார்ப்பது என்பது வேறு, சட்டப்படி அது குற்றமாக கருதப்படுவது வேறு” எனக் கூறி அவர் மீதான எப்.ஐ.ஆர் (FIR) மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

​ஒரு பெண் தனது தனிப்பட்ட அந்தரங்கச் செயல்களில் ஈடுபடும்போது, அவரை ரகசியமாகப் பார்ப்பதோ அல்லது படம் பிடிப்பதோதான் வாயரிசம் எனும் சட்டப்பிரிவின் கீழ் வரும்; ஆனால் அலுவலக மீட்டிங்கின் போது முறைத்துப் பார்ப்பது இந்தச் சட்டத்திற்குள் அடங்காது என நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

சட்டத்தை அதன் நேரடிப் பொருளைத் தாண்டி நீட்டிக்க முடியாது என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். இதேபோல், டெல்லி உயர் நீதிமன்றமும் சமீபத்தில் ஒரு ஐஸ்கிரீம் வியாபாரி மீதான இதே போன்ற வழக்கை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தத் தீர்ப்பு இப்போது சமூக வலைதளங்களில் ஆதரவாகவும், எதிராகவும் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.