உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில், சிறுவன் ஒருவன் தெருநாய்களால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தச் சிறுவன் சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு நின்றிருந்த இரண்டு தெருநாய்கள் திடீரென அவனை ஓட ஓட விரட்டித் தாக்கின.

நாய்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற அந்தச் சிறுவன், பயத்தில் “அப்பா.. அப்பா.. என்று கதறி அழுதபடி கீழே விழுந்தான். அப்போதும் விடாத அந்த நாய்கள், சிறுவனைத் தெருவில் இழுத்துச் சென்று கடித்துக் குதறின.

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அருகில் இருந்த நபர் ஒருவர், உடனடியாக நாய்களை விரட்டிச் சிறுவனை மீட்டார். நல்வாய்ப்பாக அந்த நபர் சரியான நேரத்தில் வந்ததால் சிறுவன் உயிர் தப்பினான்.

இந்த ஒட்டுமொத்த சம்பவமும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பார்ப்போரை நிலைகுலைய வைத்துள்ளது.

குடியிருப்புப் பகுதிகளில் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லை குறித்துப் பொதுமக்கள் கடும் அச்சமும் ஆத்திரமும் தெரிவித்து வருகின்றனர். தெருநாய்களைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையதளவாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.