உத்தரப் பிரதேச மாநிலத்தில், நாய்களைக் கொல்ல வைக்கப்பட்ட விஷத்தால் 25 அபூர்வ வகை கழுகுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செமரியா கிராமத்தில் தெருநாய்கள் ஆடுகளைத் தொடர்ந்து வேட்டையாடி வந்ததால், ஆத்திரமடைந்த யாரோ ஒருவர் இறந்த ஆட்டின் உடல் மற்றும் சாதத்தில் விஷம் கலந்து வைத்துள்ளனர்.
இந்த விஷத்தைச் சாப்பிட்ட 5 நாய்கள் உயிரிழந்தன. அந்த நாய்களின் உடலைத் தின்ற ‘இமயமலைக் கிரிஃபான்’ என்ற அரிய வகை கழுகுகள் பரிதாபமாக உயிரிழந்தன. இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த வனத்துறையினர், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த 6 கழுகுகளை மீட்டு சிகிச்சை அளித்தனர். இதில் 4 கழுகுகள் குணமடைந்து மீண்டும் பறக்கத் தொடங்கின, மற்றவற்றுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்த கழுகுகளின் உடல் பாகங்கள் மற்றும் விஷம் கலந்த உணவு மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆடுகளைக் காக்கச் செய்த இந்த விபரீத செயலால் அரிய வகை கழுகுகள் பலியானது அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
