ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க 48 மணிநேரம் கெடு விதித்த டிரம்ப், ஈரானை எச்சரிக்கப் பயன்படுத்திய “தகாத வார்த்தைகள்” தற்போது அவருக்கே வினையாக முடிந்துள்ளன.
“ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்துவிடுங்கள்.. இல்லையென்றால் நரகத்திற்குச் செல்லுங்கள்” என டிரம்ப் ஆக்ரோஷமாகப் பதிவிட்டது ஒரு நாட்டின் அதிபருக்கு அழகல்ல எனப் பல நாடுகளும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன. ஒருபுறம் கச்சா எண்ணெய் விலை உயர்வால் உலகச் சந்தை திணறி வரும் நிலையில், அமெரிக்காவிற்கு உதவ எந்த நாடும் முன்வராதது டிரம்பிற்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
டிரம்பின் இந்த “ஆக்ரோஷமான” பேச்சால் வெளியுறவுச் சிக்கல்கள் ஒருபுறம் இருக்க, அமெரிக்காவிற்குள்ளேயே அவருக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவர்களான சக் ஷுமர் மற்றும் பெர்னி சாண்டர்ஸ் ஆகியோர் டிரம்பின் அறிக்கையை “மனநிலை பிறழ்ந்த ஒருவரின் முட்டாள்தனம்” என மிகக் கடுமையாகச் சாடியுள்ளனர்.
ஒரு பொறுப்பான பதவியில் இருப்பவர் இதுபோன்ற தரம் தாழ்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவது உலக அரங்கில் அமெரிக்காவின் நற்பெயரைக் கெடுக்கும் என அவர்கள் எச்சரித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் கூறியுள்ள நிலையில், அமெரிக்காவிற்குள்ளேயே எழுந்துள்ள இந்த எதிர்ப்புகள் டிரம்பிற்குப் புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
