புகழ்பெற்ற இந்திய ஓவியர் ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா மற்றும் குழந்தை கிருஷ்ணா’ என்ற ஓவியம், மும்பையில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.167.20 கோடிக்கு விற்பனையாகிப் புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் இந்தியக் கலைப் படைப்புகளிலேயே அதிக விலைக்கு ஏலம் போன ஓவியம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது. இந்த ஓவியத்தில் யசோதா பசுவிடம் பால் கறப்பதையும், குழந்தை கிருஷ்ணர் பின்னால் இருந்து ஒரு கோப்பையை எடுக்க முயல்வதையும் ரவிவர்மா தத்ரூபமாகச் சித்தரித்துள்ளார்.

கடந்த ஆண்டு எம்.எப்.ஹுசைனின் ஓவியம் ரூ.118 கோடிக்கு விற்பனையான சாதனையை இந்தஓவியம் தற்போது முறியடித்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஓவியத்தை ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அதார் பூனாவாலா வாங்கியுள்ளார். 1890-களில் வரையப்பட்ட இந்த அபூர்வ ஓவியம், தாய்மையின் அன்பையும் புனிதமான புராண நிகழ்வையும் மிக நுணுக்கமாகக் காட்டுகிறது.

முதலில் ரூ.120 கோடி வரை மட்டுமே ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பலத்த போட்டிக்கு இடையே ரூ.167 கோடியைத் தாண்டி விற்பனையாகியுள்ளது. இவ்வளவு பெருமை வாய்ந்த ஓவியத்தைப் பாதுகாக்கும் வாய்ப்பு கிடைத்தது தனக்குக் கிடைத்த பாக்கியம் என்று பூனாவாலா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.