ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய முகமாகவும், மாநிலங்களவை எம்.பி-யாகவும் அறியப்படும் ராகவ் சத்தா, அக்கட்சியின் மாநிலங்களவைத் துணைத் தலைவர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக அசோக் மிட்டல் புதிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டபோது, கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், ராகவ் சத்தா அந்தப் போராட்டங்களில் பங்கேற்கவில்லை. அதேபோல், கடந்த பிப்ரவரி மாதம் கெஜ்ரிவால் விடுதலையானபோதும், அது தொடர்பான வெற்றிக் கொண்டாட்டங்களில் அவர் கலந்து கொள்ளவில்லை. இந்தத் தொடர் மௌனம் கட்சித் தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ராகவ் சத்தாவை பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக அசோக் மிட்டலை நியமிக்கக் கோரி ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவைச் செயலாளரிடம் அதிகாரப்பூர்வமாக கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ராகவ் சத்தாவுக்கும் கட்சிக்கும் இடையிலான விரிசல் பகிரங்கமாகியுள்ளது. பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்ட ராகவ் சத்தா, “நான் அமைதியாக இருப்பதால் நான் தோற்றுவிட்டதாகக் கருத வேண்டாம்” என்று சூசகமாகத் தெரிவித்திருந்தார்.
ராகவ் சத்தாவின் இந்தப் பதிவுக்கு ஆம் ஆத்மி கட்சித் தரப்பிலிருந்து கடுமையான எதிர்வினை வந்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அனுராக் தாண்டா கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாகவே பிரதமர் மோடிக்கு எதிராகப் பேச நீங்கள் அச்சப்படுகிறீர்கள். நாட்டின் உண்மையான பிரச்சினைகளை எழுப்ப நீங்கள் அஞ்சுகிறீர்கள் என்பதுதான் உண்மை என்று நேரடியாகச் சாடியுள்ளார். மேலும் இந்த மோதலால் ஆம் ஆத்மி கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளதுடன், ராகவ் சத்தாவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
