ஐபிஎல் 2026 தொடரில் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தனது பக்கம் திரும்ப வைத்துள்ளார் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியிலேயே வெறும் 15 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார்.
17 பந்துகளில் 52 ரன்கள் குவித்து ஆட்டமிழந்த இவரது அதிரடி ஆட்டத்தால், ராஜஸ்தான் அணி மிக எளிதாக வெற்றியைப் பதிவு செய்தது.
இவரது அசுரவேக பேட்டிங் திறமையைக் கண்டு வியந்த முன்னாள் ஜாம்பவான் யுவராஜ் சிங், வைபவ்வை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
வைபவ் குறித்துப் பேசிய யுவராஜ் சிங், “அவரது பேட் வேகம் பிரமிக்க வைக்கிறது, நான் விளையாடிய காலத்தில் கூட எனது பேட் இவ்வளவு வேகமாக இருந்ததில்லை” என்று புகழ்ந்துள்ளார். மேலும், வைபவ் விரைவில் இந்திய டி20 அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறிய யுவராஜ், அவருக்கு ஒரு முக்கியமான அறிவுரையையும் வழங்கியுள்ளார்.
இவ்வளவு இளம் வயதிலேயே புகழின் உச்சிக்குச் செல்லும் வைபவ், எப்போதும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், வெற்றிகளைத் தலைக்கு ஏற்றாமல் கால்களைத் தரையில் ஊன்றி கவனமாகச் செயல்பட வேண்டும் என்றும் யுவராஜ் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.
