ஐபிஎல் 2026 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி, இந்த சீசனில் தனது இரண்டாவது தொடர்ச்சியான தோல்வியைப் பதிவு செய்து ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சிஎஸ்கே நிர்ணயித்த 210 ரன்கள் என்ற இமாலய இலக்கை, பஞ்சாப் அணி 18.4 ஓவர்களிலேயே எட்டிப் பிடித்தது. தோல்வி குறித்துப் பேசிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், 210 ரன்கள் என்பது இந்த ஆடுகளத்திற்கு ஒரு மிகச்சிறந்த ஸ்கோர் என்றும், ஆனால் மிடில் ஓவர்களில் பந்துவீச்சாளர்கள் சொதப்பியதே தோல்விக்கு முக்கியக் காரணம் என்றும் வேதனை தெரிவித்தார்.
குறிப்பாக, சுழற்பந்து வீச்சாளர்களான நூர் அகமது மற்றும் ராகுல் சாஹர் ஆகிய இருவருக்கும் இது ஒரு மோசமான நாளாக அமைந்ததால், ரன் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதாகவும், அழுத்தம் உருவாக்கப்படாததால் பஞ்சாப் அணி எளிதாக வெற்றி பெற்றதாகவும் ருதுராஜ் ஓப்பனாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
