ஈரான் போர் சூழலால் உலக அரசியல் ஒழுங்கு பெரும் மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் அமெரிக்காவின் முடிவுக்கு எதிராக பிரான்ஸ் நாடு, ரஷ்யா மற்றும் சீனாவுடன் கைகோர்த்துள்ளது. ஹார்முஸ் நீரிணை தொடர்பாக பஹ்ரைன் கொண்டு வந்த தீர்மானத்தை அமெரிக்கா ஆதரித்த நிலையில், அதற்கு எதிராக பிரான்ஸ் தனது ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக 2003-ல் ஈராக் போரின் போது இதே போன்று இந்த மூன்று நாடுகளும் அமெரிக்காவை எதிர்த்தன. தற்போதைய சூழலில் அமெரிக்காவுடனான உறவில் விரிசல் மற்றும் ஈரானுடனான வர்த்தக நலன்கள் காரணமாக பிரான்ஸ் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்தக் கூட்டணி மாற்றம் சர்வதேச அளவில் அமெரிக்காவின் செல்வாக்கிற்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கருத்துக்கள் மற்றும் இஸ்ரேலுடனான பிரான்சின் மோதல் போக்கு ஆகியவை இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாகின்றன.

இது குறிப்பாக, இஸ்ரேலிய விமானங்களுக்கு பிரான்ஸ் தனது வான்பரப்பை மூடியுள்ளதோடு, ஈரான் பகுதியில் பிரான்சின் சரக்குக் கப்பல்கள் தடையின்றிச் செல்ல ரகசிய ஒப்பந்தங்கள் எட்டப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரான்சின் இந்த நிலைப்பாடு நேட்டோ அமைப்பின் எதிர்காலம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.