அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான தனபாலுக்கு இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் இக்கட்டான காலக்கட்டங்களிலும், பிளவுகளின் போதும் சற்றும் மனம் தளராமல் இயக்கத்தைக் காப்பதில் முன்னின்று உழைத்தவர் தனபால்.
இதனால் விசுவாசத்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்ட ஒரு மூத்த தலைவருக்கு, தற்போது சீட் வழங்கப்படாதது கட்சியின் உள்விவகாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விமர்சித்துள்ள தவெக நிர்வாகி செங்கோட்டையன், “அதிமுகவை அழியாமல் காத்த விசுவாசிக்கு இன்று இடமில்லை; பணம் இருந்தால் மட்டுமே கட்சியில் சீட் கிடைக்கும் என்ற நிலை உருவானது வேதனையளிக்கிறது” எனப் பொங்கியுள்ளார்.
மேலும் தற்போதுள்ள அரசியல் சூழலில் கொள்கையும் விசுவாசமும் இரண்டாம் பட்சமாகி, பண பலமே வேட்பாளர் தேர்விற்கான பிரதான தகுதியாக மாறிவிட்டதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் முதல் மூத்த நிர்வாகிகள் வரை பலரும் தனபாலுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியை அதிருப்தியுடன் அணுகுகின்றனர்.
இந்நிலையில் நீண்டகாலமாக கட்சியைத் தாங்கிப் பிடித்த ஒரு தலைவருக்கே இந்த நிலை என்றால், சாதாரணத் தொண்டனின் நிலை என்ன என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் வரும் தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
