ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் படைகளுக்கு இடையே நிலவி வரும் போர் பதற்றத்திற்கு மத்தியில், ஈரான் மீது ஒரு பெரிய தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், ஈரானின் புஷெர் அணுமின் நிலையத்தில் பணியாற்றும் தனது நாட்டு ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ரஷ்யா தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

மேலும் அங்கு சுமார் 400 முதல் 700 ரஷ்ய ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், எஞ்சியுள்ள சுமார் 200 ஊழியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இதற்காக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடம் ஒரு தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா கோரியுள்ளது.

இந்த மீட்பு நடவடிக்கையின் போது ரஷ்ய ஊழியர்கள் வெளியேறும் பாதைகளை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ரஷ்யா முன்கூட்டியே அறிவிக்கும் என்று ரஷ்யாவின் அரசு அணுசக்தி நிறுவனமான ‘ரோசாட்டம்’ தெரிவித்துள்ளது. ஊழியர்களின் பாதுகாப்பு வாகன அணிவகுப்பு செல்லும் போது தாக்குதல்கள் ஏதும் நடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அனைத்து தூதரக ரீதியிலான வழிகளையும் ரஷ்யா பயன்படுத்த உள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா ஈரானைத் தாக்கிப் பழைய கற்காலத்திற்குத் தள்ளப் போவதாக எச்சரித்துள்ள நிலையில், ரஷ்யாவின் இந்த அவசர நடவடிக்கை ஈரானில் ஒரு பாரிய போர் வெடிக்கக்கூடும் என்பதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.