இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் வீரேந்தர் சேவாக் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி அஹ்லாவத் ஆகியோரது 20 ஆண்டுகாலத் திருமண வாழ்க்கை முறிந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, சேவாக்கின் நண்பரும் முன்னாள் வீரருமான மிதுன் மன்ஹாஸுடன் ஆர்த்தியை இணைத்து வெளியாகும் செய்திகளால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த 2024-ஆம் ஆண்டின் இறுதியிலும், 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் சேவாக் மற்றும் ஆர்த்தி இருவரும் பரஸ்பரம் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஒருவரையொருவர் ‘அன்ஃபாலோ’ (Unfollow) செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், கடந்த தீபாவளி உள்ளிட்ட முக்கிய பண்டிகைகள் மற்றும் குடும்ப விழாக்களில் சேவாக் தனது தாய் மற்றும் மகன்களுடன் மட்டுமே புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நீண்ட காலமாக ஆர்த்தி அஹ்லாவத் எந்தவொரு குடும்பப் புகைப்படங்களிலும் காணப்படாதது, இருவரும் பிரிந்து வாழ்கிறார்களா? என்ற சந்தேகத்தை இணையவாசிகள் மத்தியில் வலுப்படுத்தியுள்ளது.

தற்போது பிசிசிஐ (BCCI) உயர்மட்டக் குழு உறுப்பினராக இருக்கும் மிதுன் மன்ஹாஸ், சேவாக்குடன் பல ஆண்டுகள் டெல்லி அணிக்காக விளையாடியவர். மிக நெருங்கிய குடும்ப நண்பரான இவரை மையப்படுத்தி, அடிப்படை ஆதாரமற்ற சில வதந்திகள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன. ஒரு குடும்ப நண்பராக பழகி வந்த நிலையில், தற்போதைய சூழலை வைத்து சிலர் இத்தகைய தேவையற்ற யூகங்களை கிளப்பிவிட்டுள்ளதாகத் தெரிகிறது.

அதாவது விவாகரத்து குறித்தோ அல்லது புதிய உறவு குறித்தோ வீரேந்தர் சேவாக், ஆர்த்தி அல்லது மிதுன் மன்ஹாஸ் ஆகிய மூவரில் யாரும் இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை. ஹர்திக் பாண்டியா போன்ற பிரபல கிரிக்கெட் வீரர்களைப் பற்றி சமூக வலைதளங்களில் பரப்பப்படும் மிகைப்படுத்தப்பட்ட வதந்திகளைப் போலவே இதுவும் ஒரு வகை செய்தியாகவே பார்க்கப்படுகிறது. மேலும் மன்ஹாஸ் மற்றும் சேவாக் பல தசாப்த கால நண்பர்கள் என்பதால், ஒரு குடும்ப நண்பரைத் தேவையற்ற சர்ச்சையில் இழுப்பது முறையற்றது என ஒரு தரப்பினர் கருத்து தெரிவிக்கின்றனர்.