ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் ராஜாம் பகுதியைச் சேர்ந்த ரவீந்திரா என்பவர் விசாகப்பட்டினத்தில் கடற்படை தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றி வந்தார். திருமணத்திற்குப் பின்னரும் மவுனிகா என்ற பெண்ணுடன் இவருக்குக் கள்ளத்தொடர்பு நீடித்து வந்த நிலையில் அந்தப் பெண் அடிக்கடி பணம் கேட்டு ரவீந்திராவை வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ரவீந்திரா மவுனிகாவைக் கொலை செய்யத் திட்டமிட்டுத் தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அங்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மவுனிகாவைச் சரமாரியாகக் குத்திக் கொலை செய்த ரவீந்திரா பின்னர் அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் அடைத்துக் குளிர்சாதனப் பெட்டிக்குள் மறைத்து வைத்துள்ளார்.

இந்தக் கொடூரச் செயலைச் செய்த பின்னர் ரவீந்திரா நேரடியாகக் காவல் நிலையம் சென்று சரணடைந்தது அங்கிருந்த காவலர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தகவலறிந்து ரவீந்திராவின் வீட்டிற்குச் சென்ற காவல்துறையினர் குளிர்சாதனப் பெட்டியில் இருந்த உடல் பாகங்களை மீட்டனர். இருப்பினும் கொல்லப்பட்ட பெண்ணின் தலை மட்டும் அங்குக் கிடைக்காததால் அதனைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

பணம் கேட்டுத் தொல்லை கொடுத்ததால் இந்தக் கொலையைச் செய்ததாக ரவீந்திரா வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடற்படை ஊழியர் ஒருவரே இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.