தமிழக அரசியலில் தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் ஒரு சுவாரஸ்யமான போட்டி உருவாகியுள்ளது.

திமுகவின் நட்சத்திர வேட்பாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் டி.செல்வம் வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டுள்ளார். வெறும் 5 நாட்களுக்கு முன்புதான் (மார்ச் 25) காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட டி.செல்வம், அடுத்த நாளே நடிகர் விஜய்யின் தவெக-வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இணைந்த வேகத்திலேயே உதயநிதிக்கு எதிராக ஒரு முக்கிய தொகுதியில் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளரான செல்வத்தை, தங்களது கோட்டையான சேப்பாக்கத்தில் களம் இறக்கி திமுகவுக்குத் தவெக கடும் சவாலை அளித்துள்ளது.