அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில், தனது வீட்டின் மேற்கூரையைச் சரிசெய்ய வந்த தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய கூலித் தொகையைத் தராமல் ஏமாற்ற, அவர்களைக் குடிவரவுத் துறை அதிகாரிகளிடம் (ICE) ஒரு பெண் பிடித்துக் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது  ஆறு தொழிலாளர்கள், ஒரு பெண்ணின் வீட்டின் மேற்கூரையைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பணி ஏறக்குறைய முடியும் தருவாயில் இருந்தபோது, அந்தப் பெண் திடீரென அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், மேற்கூரையில் வேலை செய்து கொண்டிருந்த 18 முதல் 40 வயதுக்குட்பட்ட அந்தத் தொழிலாளர்களைக் கீழே இறங்குமாறு கட்டாயப்படுத்தி, அவர்களைக் கைது செய்தனர். இந்த மொத்தச் சம்பவத்தையும் அங்கிருந்த பிரையன் போலன்கோ என்ற சக ஊழியர் சமூக வலைதளங்களில் நேரலை செய்ததை அடுத்து இது வெளிச்சத்திற்கு வந்தது.

அந்தப் பெண் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 10,000 அமெரிக்க டாலர் கூலியை (சுமார் 8 லட்சம் ரூபாய்) தராமல் இருக்கவே, திட்டமிட்டு அதிகாரிகளை அழைத்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது. “மீண்டும் யாராவது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலைக்கு வந்தால், மீண்டும் அதிகாரிகளை அழைப்பேன்” என்று அந்தப் பெண் மிரட்டியதாகப் போலன்கோ தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது அப்பட்டமான வஞ்சகம்” என்று ஒரு தரப்பினரும், அவர்கள் சட்டவிரோதக் குடியேறிகள் என்று தெரிந்தே வேலைக்கு அமர்த்திய அந்தப் பெண்ணையும் கைது செய்ய வேண்டும் என்று சட்ட ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரின் மனைவி, ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், நாங்கள் இங்கு பிழைப்பு நடத்தவே வந்தோம், யாருக்கும் தீமை செய்ய வரவில்லை. என் கணவரின் நிலை என்னவென்று தெரியாமல் தவிக்கிறேன் என்று கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார். மேலும் வீட்டை விட்டு வேலைக்குச் சென்றால், மீண்டும் திரும்புவோமா என்று தெரியாத நிலையில் நாங்கள் அச்சத்துடனேயே வாழ்கிறோம் என்று அங்கிருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.