மேற்காசியப் பகுதியில் நிலவி வரும் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், அமெரிக்கா முன்மொழிந்த 15 அம்ச அமைதித் திட்டத்தை ஈரான் அதிரடியாக நிராகரித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, ஈரான் நாட்டின் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் வான்வழியாக ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தின. இந்தத் தொடர் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இதற்குப் பதிலடியாக, ஈரானும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ராணுவத் தளங்களைக் குறிவைத்துத் தீவிரத் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் போர்க்களமாகக் காட்சியளிக்கிறது.

போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புவதாகக் கூறும் அமெரிக்கா, அதற்காக 15 அம்சங்கள் கொண்ட அமைதித் திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. எகிப்து மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் மூலமாக இந்தத் திட்டம் ஈரானிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் முக்கிய அம்சங்கள் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குதல். ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முழுமையாகக் கைவிடுதல். ஏவுகணை தயாரிப்பு மற்றும் பயன்பாட்டிற்கு கடும் கட்டுப்பாடு. மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறத்தல். ஆயுதக் குழுக்களுக்கு வழங்கி வரும் ஆதரவை ஈரான் நிறுத்திக்கொள்ளுதல் போன்றவைகளாகும்.

இந்தத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள பல நிபந்தனைகள் போருக்கு முந்தைய பேச்சுவார்த்தைகளில் இல்லாத புதிய நிபந்தனைகள் ஆகும். இதனை ஏற்க ஈரான் மறுத்துவிட்டது. குறிப்பாக, தனது பாதுகாப்பு அரணாகக் கருதப்படும் நீண்டதூர ஏவுகணைத் திட்டம் மற்றும் பிராந்திய ஆயுதக் குழுக்களுக்கான ஆதரவு குறித்துப் பேசவே முடியாது என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மேலும், உலக வர்த்தகப் பாதையில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணை மீதான தனது கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்கவும் ஈரான் முன்வரவில்லை.

இந்தப் போர் குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், “கடந்த 47 ஆண்டுகளில் எந்த அமெரிக்க அதிபரும் செய்யத் துணியாததை நாங்கள் செய்துள்ளோம். ஈரானின் அணு ஆயுத மிரட்டல் என்பது ஒரு ‘புற்றுநோய்’. உலகப் பாதுகாப்பிற்காக அந்தப் புற்றுநோயை அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிட்டோம். இந்த வேலையை முழுமையாக முடித்து, ஈரானின் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்,” என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானின் மின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தாமல் கடந்த மூன்று நாட்களாக அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பளித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. “தற்போதைய எதார்த்தத்தை ஈரான் உணராவிட்டால், இதுவரை சந்தித்திராத மிகக் கடுமையான தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும். அதிபர் டிரம்ப் வெறும் மிரட்டல் விடுபவர் மட்டுமல்ல,” என்றும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது. தற்போது இரு தரப்பிற்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மத்தியஸ்தர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.