ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு முன்பாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளராக இருந்த மனோஜ் படாலேவின் 65 சதவீத பங்குகள் உட்பட 100 சதவீத பங்குகளையும் அமெரிக்க தொழிலதிபர் கால் சோமானி வாங்கியுள்ளார். சுமார் 13,600 கோடி ரூபாய்க்கு (1.63 பில்லியன் டாலர்) இந்த பிரம்மாண்ட ஒப்பந்தம் நடைபெற்றுள்ளது.

கடந்த 2021 முதல் இந்த அணியில் முதலீட்டாளராக இருந்து வரும் கால் சோமானி, கல்வி மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். இந்த புதிய மாற்றம் ஐபிஎல் தொடரின் வணிக மதிப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், இந்த உரிமையாளர் மாற்றம் 2026 சீசனுக்குப் பிறகுதான் நடைமுறைக்கு வரும் என்பதால், தற்போதைய தொடரில் எந்த பாதிப்பும் இருக்காது. வரும் மார்ச் 30-ம் தேதி குவஹாத்தியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் களம் இறங்குகிறது.

புதிய கேப்டன் ரியான் பராக் மற்றும் பயிற்சியாளர் குமார் சங்கக்காரா தலைமையில் அணி தீவிரமாகத் தயாராகி வருகிறது. 2008-ல் முதல் ஐபிஎல் கோப்பையை வென்ற ராஜஸ்தான் அணி, இந்த புதிய நிர்வாக மாற்றத்திற்குப் பிறகு மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.